Showing posts with label ஒளவையின் மூதுரை.. Show all posts
Showing posts with label ஒளவையின் மூதுரை.. Show all posts

7.10.13

ஔவையாரின மூதுரை விளக்கம் – 24


நற்றாமரைக் கயத்தில்நல் லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை யுகக்கும் பிணம்.


விளக்கம்.

நல்ல தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் சிறந்த அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்வதைப் போல கற்ற அறிஞர்களை விரும்பிச் சேர்ந்து வாழ்வார்கள் கற்றவர்கள். சுடுகாட்டில் உள்ள பிணத்தை காக்கையானது விரும்புவதைப்போல முரடர்களை முரடர்களே விரும்பவர்.

(கருத்து – நல்லவர்களை நல்லவர்களே விரும்புவர். கெட்டவர்களைக் கெட்டவர்களே விரும்புவர் என்பதாம்)

3.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 23




கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.

விளக்கம்.

கல்லைப் பிளந்தால் திரும்பவும் ஒட்டாததுபோல கயவர் ஒருவரிடம் கடுஞ்சினத்தால் பிரிந்தால் பிறகு கூட மாட்டார்கள். பொன்னைப் பிளந்தால் திரும்பவும் வேறு ஒருவரின் தயவுடன் கூடுவது போல் நடுதரத்தவர் கூடுவர். வில்லைப்பிடித்து நீரில் கிழிக்க, நீரானது உடனே எப்படி சேர்ந்துவிடுமோ அதுபோல சிறந்தவழியில் நடக்கும் சான்றோரின் கோபம் உடனே மறைந்து கூடுவர்.

(கருத்து – மூடர்கள் கோபம் கொண்டால் எப்பொழுதும் கூட மாட்டார்கள். நடுத்தரமானவர்கள் யாராவது கூட்டினால் கூடிவிடுவார்கள். அறிஞர்கள் தாமாகவே கூடிவிடுவார்கள் என்பதாம்)

2.10.13

ஒவையாரின் மூதுரை விளக்கம் – 22




எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

விளக்கம்.

வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, நல்லதையே நினைத்துச் சென்று கற்பக மரத்தை அடைந்தவர்களுக்கும் எட்டிக்காயை அம்மரம் கொடுத்ததேயானால் அது (அவர்) போன பிறப்பில் செய்ததாகிய செய்கையின் பலனாகும். ஆதலால் ஒவ்வொரு செயலும் நீ நினைத்த விழியே கூடிவருவதும் கூடாத்தும் பிரமன் விதித்த வழியின்படியே நடக்கும்.

(கருத்து – ஒவ்வொரு செயலும் அவரவர்கள் விதியின் படியே நடக்கும் என்பதாம்.)

3.8.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 21



இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

விளக்கம்.

நல்ல மனைவி வீட்டில் அமைந்தால், ஒருவனுக்கு இல்லையென்று சொல்லத்தக்க ஒரு பொருளும் கிடையாது. மனைவியானவள் கடுமை பொருந்திய பேச்சை பேசுவாளானால் அந்த வீடானது புலியானது தங்கியுள்ள புதராக ஆகும்.

(கருத்து -  நல்ல குணமுடைய மனைவியுள்ள வீடு எல்லாச் சிறப்பும் உடையதாக இருக்கும். கொடிய மனைவியுள்ள வீடு பலியின் புதரைப் போல எல்லாருக்கும் பயத்தைக் கொடுக்குமாம்)

30.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 20


 
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

விளக்கம்.

கூட பிறந்தவர்கள் உறவினர்கள் என நினைத்து அவர்களை நம்பிவாழ வேண்டியதில்லை. நோயானது மனிதன் உடலிலேயே பிறந்ததாக இருந்தே கொன்றுவிடும். நம்மொடு பிறக்காதாகிய பெரிய மலையிடத்துள்ள இலை, கொடி முதலிய மருந்துகளே நோயை போக்கும். (அதுபோல) அந்த மருந்தை ஒத்தவர்களும் (ஆதாவது உடன்பிறவாத மற்றவர்களும்) நம் துன்பத்தைப் போக்குவர்களும் உள்ளனர்.

(கருத்து – நமக்குச் சம்பந்தம் உள்ளவர்களில் தீமை செய்வோரும், அயலார்களில் நன்மை செய்வோரும் உண்டு என்பதாம்)