13.12.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 30


சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

விளக்கம்.

மரமானது மக்கள் தன்னை அடியோடு வெட்டும் வரையிலும் வெயிலைத் தடுத்துக் குளிர்ந்த நிழலைத் தந்துதவும். (அதுபோல) அறிவுடைய நல்லோர்கள், பிறர் தமக்குக் கெடுதிகளையே செய்தாலும் சாகும் வரையிலும் தாங்கள் அக்கெடுதி செய்பவர்களைத் தங்களால் ஆனமட்டிலும் காப்பாற்றுவர்.

(கருத்து – அறிவுடைய நல்லோர், தங்களுக்குத் துன்பஞ் செய்பவர்களுக்கும் நன்மையே செய்வார்கள் என்பதாம்)


மூதுரை முற்றும்.

12.12.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 29



மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் – திருமடந்தை
ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம்.

விளக்கம்.

சேர்ந்துள்ள இன்பத்தைத் தரும்படியான உறவும் சிறந்த பொருள்களும் அழகிய வடிவமும் உயர்ந்த குடியும் மற்ற எல்லாப் பெருமைகளும் செல்வம் (இலட்சுமி) ஒருவனிடன் உள்ள போது அவளுடனே அனைத்தும் வந்து சேரும். அவள் போகும் போது அனைத்தும் அவளுடனே போகும்.


(கருத்து – செல்வம் ஒருவனிடத்தில் உள்ளவரை எல்லாச் சிறப்புகளும் பொருந்தி வரும். அது நீங்கினால் எல்லாம் போய்விடும் என்பதாம்)

30.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 28



சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் – தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.

விளக்கம்.

சந்தனமர கட்டையைத் தேய குறைபட்டாலும் அதன் வாசனையில் குறையாது. ஆகையால் மாலையணிந்த அரசர்கள் தங்கள் தங்களுடைய செல்வத்திலே குறைந்தவர்கள் ஆனாலும் மனத்தின் தன்மையிலே குறைந்தவர் ஆவார்களோ? (ஆகமாட்டார்)


(கருத்து – சிறந்தவர்கள் செல்வம் குறைந்தபோதும் மனத்தின் நல்ல தன்மையிற் குறைய மாட்டார்கள் என்பதாம்)

17.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 27




கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

விளக்கம்.

படிக்காத மக்களுக்குப் படித்து அறிந்தவர்களின் சொல்லானது எமன் போன்றதாகும். நேர்வழி வாழாதவர்க்கு தரும தேவதையே எமனாகும். மென்மையான வாழை மரத்திற்கு தான் பெற்ற காயே எமனாகும். இல்லத்தில் பொருந்தி வாழாத பெண்ணுக்கு அப்பெண்ணே அவளுக்கு எமனாவாள்.

(கருத்து – மூடர்களுக்கு அறிஞர்கள் சொல் துன்பத்தைத் தரும். பாவிகளுக்கு அறமே துன்பத்தைத் தரும். வாழைக்கு அதன் காயே துன்பத்தைத் தரும். வீட்டிற்கு அடங்கி நடக்காத பெண் துன்பமடைவாள் என்பதாம்)

15.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 26




மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னனுக்குத்
தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.

விளக்கம்.

அரசனையும் குற்றங்கள் இல்லாமல் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் அரசனைக் காட்டிலும் படித்தவனே மேன்மை உடையவன் ஆவான். மன்னவனுக்கு தனது நாட்டில் அல்லாத வேறு நாட்டில் பெருமை இல்லை. ஆனால் படித்தவருக்குப் போகும் இடத்திலெல்லாம் பெருமை கிடைக்கும்.

(கருத்து – அரசனைப் பார்க்கிலும் புலவரே சிறந்தவராவார் என்பதாம்)

9.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 25



நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

விளக்கம்.

நல்ல பாம்பானது விடத்தை வைத்திருந்தலைத் தானே தெரிந்தும் மறைந்து வாழும். விடமில்லாத நீரிப்பாம்பானது பயப்படாமல் வெளியில் வாழும். (அதுபோல) மனத்திலே வஞ்சகம் உடையவர்கள் தங்களை மறைத்து வாழ்வார்கள். வஞ்சகம் இல்லாத மனத்தை உடையவர் தங்களை மறைத்து வாழ மாட்டார்.

(கருத்து – வஞ்சகம் உள்ளவர்கள் யாரோடும் கூடாமல் மறைந்து வாழ்வார்கள். வஞ்சகம் இல்லாதவர்கள் எல்லோரோடும் கூடி வாழ்வார்கள் என்பதாம்)

7.10.13

ஔவையாரின மூதுரை விளக்கம் – 24


நற்றாமரைக் கயத்தில்நல் லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை யுகக்கும் பிணம்.


விளக்கம்.

நல்ல தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் சிறந்த அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்வதைப் போல கற்ற அறிஞர்களை விரும்பிச் சேர்ந்து வாழ்வார்கள் கற்றவர்கள். சுடுகாட்டில் உள்ள பிணத்தை காக்கையானது விரும்புவதைப்போல முரடர்களை முரடர்களே விரும்பவர்.

(கருத்து – நல்லவர்களை நல்லவர்களே விரும்புவர். கெட்டவர்களைக் கெட்டவர்களே விரும்புவர் என்பதாம்)